ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள்
தேர்தல் முடிந்த மறுநாள் (24.04.2026) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்களால் நிகழ்த்தப்பட்ட ஜும்மா பிரசங்கங்கள், ஓரளவிற்கு ஒத்த கருத்துடையதாகவே இருப்பதை ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல்களிலும் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
பெரும்பாலும் பள்ளிவாசல் பிரசங்கங்களில் அரசியல் பேசப்படுவதில்லை. இந்த முறை தேர்தலுக்கு முன் முஸ்லீம்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று பூடகமாக சில ஆலிம் பெருமக்களும், பகிரங்கமாக சில ஆலிம் பெருமக்களும் பயான்களிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளக்கி தங்கள் கருத்தை தெரிவித்தார்கள்.
ஜமாஅத் நிர்வாகிகளுக்கும், ஊருக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், அச்சப்பட்டவர்களாகவும், இருந்த பல ஆலிம் பெருமக்கள், தேர்தலுக்கு மறுநாள் தங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆதங்கங்களை தங்களது ஜும்மா உரையில் பொங்கித் தள்ளி விட்டார்கள்.
தனி மனிதனாக தேர்தல் களத்துக்கு புதியதாக வந்திருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தையும், அவர் பின்னே கண்மூடித் தனமாக செல்லும் இஸ்லாமிய குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் நடுத்தர வயதுடையோர் பற்றியுமே பேசியிருக்கிறார்கள்
அந்த நடிகர் யார் ? என்ன செய்திருக்கிறார் ? அவர் பின்னணி என்ன ? அவர் தனிப்பட்ட வாழ்க்கையின் நிலை என்ன ? அவர் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன ? இவரால் நம் ஈமானுக்கும், நம் சமுதாயத்துக்கும் என்னவெல்லாம் பங்கம் நேரும் என்று எந்தவொன்றையும் தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளவும் விரும்பாமல் நடிகர் என்ற ஒரே ஒரு கவர்ச்சி ஈர்ப்பில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக நம்பி செயல்படுகிறார்கள் என்பதுதான் அவர்கள் அனைவரும் பேசிய உரைகளின் சாராம்சம்.
இறை நம்பிக்கையின் மீதான ஈமானை துறந்து, ஒரு நடிகனுக்காக புர்கா அணிந்த முஸ்லீம் பெண்கள் சொல்லவே கூசும் வார்த்தைகளைப் பேசி அதை பொது வெளியில் பகிர்வதும், புர்காவோடே ஆட்டம் போடுவதும், அந்த நடிகனின் வெற்றிக்காக உம்ரா செய்ததாகவும், வெள்ளிக்கிழமை தொழுகையைக் கூட விட்டு விட்டு அவனைப் தரிசிக்கச் சென்றதாகக் கூறுவதும், இவை அனைத்தையும் காட்சி ஊடகங்களில் பெருமையோடு பகிர்வதும், அறிவீனத்தின் உச்சம்.
இந்த வழிகேட்டில் இஸ்லாமிய சமூகம் எங்கு தவறியது ? எப்படி இவை நிகழ்ந்தன ? என்பவற்றை பல ஆலிம் உலமாக்களும், அரசியல் சமூக அறிஞர்களும் வருத்தத்தோடு எடுத்து வைக்கிறார்கள்.
காரணங்கள்:
கடந்த சுமார் 30 வருடங்கள் முன்பு வரை குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்வதும், சுன்து சுபியான் போன்ற கிதாப்கள் மூலமும், உஸ்தாதுமார்களின் பயிற்றுவிப்புக்களின் மூலமும் தொழுகை, நோன்பு போன்றவற்றைப் பற்றிய புரிதல் மட்டும்தான் ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. அது அன்றைக்கு போதுமானதாகவும் இருந்தது.
அதன் பிறகே பல தமிழ் நூல்கள் வெளி வந்தன. TV வீடியோக்களின் மூலமும் பல விளக்க வழிகாட்டல்கள் கிடைத்தன.
இதற்கிடையில் இஸ்லாமிய ஜமாஅத்கள் பல அமைப்புக்களாக சிதறுண்டன. வெவ்வேறு வகை முரண்பட்ட வழிகாட்டல்களும் கிடைத்தன.
அப்போது பெரும்பாலான பெற்றோர்கள் சுன்னத் ஜமாஅத்தில் இருக்க, பிள்ளைகளோ தவ்ஹீது, JAQH போன்ற அமைப்புக்களுக்கு சென்றடைந்தனர்.
இப்போதும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது. பெற்றோர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்க, பிள்ளைகள் (மகன், மகள்) த.வெ.க வின் தீவிர ஆதரவாளர்களாக ஆகியிருக்கின்றனர்.
இரு சம்பங்களையும் ஒன்று என்று நான் சொல்லவில்லை. ஆனால் தலைமுறை இடைவெளியில் கருத்துக்களும் மாறும் என்பதைத்தான் சொல்கிறேன்.
பெற்றோர்களும், பிள்ளைகளும் வெவ்வேறு முரண்பட்ட ஜமாஅத்களில் இருந்தாலும், அன்றைக்கு எல்லோருமே பொது வாழ்க்கைக்கு நல்ல வழிதான் காட்டினார்கள்.
' குடிக்காதே வட்டி வாங்காதே, வரதட்சணை வாங்காதே, திருடாதே, பிறரை கெடுக்காதே ' போன்ற நல்ல கருத்துக்களை மிதமாக பெற்றோர்கள் பேசி வந்த போது இளம் தலைமுறையினர் அவற்றை தீவிரமாக பிரச்சார இயக்கமாக மாற்றியும், செயல்படுத்தியும் காட்டி வந்தனர்.
இவர்களைப் போன்றவர்கள் இருந்தும் கூட இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளம் இப்படி ஒரு இழிநிலைக்குப் போயிருக்கிறது.
ஆண்களைப் பொறுத்தவரை அதிகமாக வெளியுலகத் தொடர்பில், பள்ளிவாசல் தொடர்பில் இருக்கின்றார்கள். குறைந்த பட்சம் ஜும் ஆ பயானிலாவது சில நல்ல சொற்கள் அவர்கள் காதுக்குள் வந்து சேர்ந்து விடும்.
ஆனால் பெண்களைப் பொறுத்தவரை குர்ஆன் ஓதி முடித்து விட்டால் போதும். மற்ற விஷயங்களான தொழுகை, நோன்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படையிலான நல்வாழ்க்கைக்கான சில வழிகாட்டல்கள் அவர்களின் மதரசா உஸ்தாதுமார்களிடமிருந்தும், தாய், சகோதரிகள் போன்றோரிடமிருந்தும் ஒரு காலத்தில் கிடைத்தன.
மீலாது விழா காலங்களில் ஒரு வாரம், பத்து நாள் என பயான் தொடர் சொற்பொழிவுகள் நடக்கும். அதிலிருந்தும் இஸ்லாமிய வரலாறுகள், படிப்பினைகள் போன்றவற்றை அறிந்து கொண்டார்கள். இந்தக் குறைந்தபட்ச வழிகாட்டலைக் கொண்டு பலமான ஈமானுடன் இஸ்லாம் காட்டிய நல்வழியில் அந்தப் பெண்மணிகள் வாழ்ந்து காட்டினார்கள்.
ஆனால் இன்று வீட்டிலுள்ள பெண்களுக்கு மேலே சொன்னவையெல்லாம் குறைந்து போயின. சில காணாமலே போயின.
இன்றைய தலைமுறையினருக்கு மார்க்க விஷயங்களைப் பற்றிய போதிய வழிகாட்டல்களை கொடுக்கத் தவறி விட்டோம்.
அன்றைக்கு பல குழந்தைகளைப் பெற்றிருந்ததால், பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காமல், மார்க்க விஷயத்தில் மிகுந்த கண்டிப்புடன் தங்கள் மக்களை வளர்த்தார்கள்.
இன்றோ, ஒன்றோ இரண்டோ மட்டும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு எதற்குமே கண்டிப்பு காட்டாமல், மிருந்த செல்லத்துடன் வளர்த்து வருகிறார்கள்.
அதுவும் மக்தப் மதரஸாவில் குர்ஆன் ஓதி முடித்து விட்டால், அத்தோடு அதை ஓரம் கட்டி வைத்து விட்டு, உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்.
பள்ளி பருவம் முடிந்து கல்லூரிகளுக்குள் நுழைகிற போதே சர்வ சுதந்திரம் பெற்று விட்டவர்களாகவும், எல்லாமே எங்களுக்கு தெரியும் என்கிற மனநிலையிலும் பிள்ளைகள் வளர்ந்து நிற்கின்றனர்.
அத்தோடு அவர்களுக்கும் மார்க்கத்திற்குமான தொடர்பு அறுந்து போய் விடுகிறது.
கல்லூரியில் கூடா நட்பு, ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் போன்றவை அவர்களை வழிகேட்டிற்குள் கொண்டு போய் விடுகின்றது.
மீண்டும் யோசித்துப் பாருங்கள்.
மார்க்கம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டல்கள் குறைந்து போய் விடுகின்றது. கண்டிப்பு குறைந்து செல்லம் கொடுப்பது அதிகரிக்கிறது. இதனால் மார்க்கத்துடனான தொடர்பு அறுந்து போகிறது.
இந்த நேரத்தில் வேறு தவறான கருத்துக்கள் அவர்களிடம் வந்தடைகின்றன.
இந்த பருவத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கு அட்வைஸும் பிடிக்காது, அட்வைஸ் பண்றவங்களையும் பிடிக்காது. அதனால் அவர்களிடம் யாரும் அறிவுரை சொல்வது பிரயோசனமில்லாமல் போயிருக்கிறது.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் காட்சி பகிர்வுகள் - Youtube, Whatsapp, instagram, face book, ரீல்ஸ் போன்றவற்றின் தாக்கம் வேறு வெகுவேகமாக பரவி இருக்கிறது.
அதிலும் குறைந்த நேர படக்காட்சிகளே அதிகம் பலரையும் ஈர்க்கிறது. அவர்கள் ஒரு முழு நீள வீடியோக்களை, வீடியோ / ஆடியோ உரைகளை பார்க்கவோ, கேட்கவோ பொறுமை இல்லாதவர்கள். ஆக்சன் படங்களை மட்டுமே பார்த்து ரசிப்பவர்கள்.
ஒரு சாமான்ய ரசிகனை மகிழ வைக்கும் சினிமாவில் திரையில் காட்சிகள் நகர வேண்டும் அல்லது நடிப்பவர் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் வெகுஜன சினிமாவின் வெற்றி ஃபார்முலா. ஒரே இடத்தில் இருந்து வசனம் பேசி உரையாடுபவர்களை திரையில் பார்க்கப் பிடிக்காது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த வெற்றிகரமான வெகுஜன சினிமாவின் ஃபார்முலா விஜய்யின் மேடைப் பேச்சுக்களில் தெரியும். அவர் பேசும் உரை சுருக்கமாகவும், சில நிமிடங்களில் முடிப்பதாகவும் இருக்கும். அதுவும் மேடையில் (அ) பேருந்தில் சில அடிகள் நகர்ந்து கொண்டே பேசுவதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
நீளமான வீடியோக்களைக் கூட பார்க்க பொறுமையில்லாதவர்களுக்கு ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் இருக்காது. இதனால் எதையும் ஆழ்ந்து சிந்திப்பது என்பது போய் அந்தந்த நேரத்து உணர்ச்சிபூர்வ உரைகளுக்கு மயங்கிப் போய் அதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுகின்றனர். நடிகனின் வெறும் வெற்றுச் சவடால் பன்ச் டயலாக்குகளுக்கு மயங்கி விசிலடித்து அதை ரசித்து மகிழ்கின்றனர்.
இப்பொழுது இப்படி ரசிப்பதையும் தாண்டி ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் தங்களையே காட்சிப் பொருளாகக் காட்டி உலா வரும் அவலம் பெருகியிருக்கிறது.
புர்கா, தொப்பி போன்ற மார்க்க அடையாளங்களுடன் திரையில் தோன்றி சொல்லவும், எழுதவும் கூசத் தக்க பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பேசி, ஈமான் இஸ்லாம் என்பவற்றை மறந்து ரீல்ஸுகளாக வெளியிட்டு அதில் பெருமையும் கொள்கின்றனர்.
சாதாரண உடையில் பேசுவது, கத்துவது என்பது பத்தோடு பதினொன்றகப் போய் விடும். அது பற்றி நாம் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை ஆனால், தங்கள் உடை சாதாரணமானதாக இருந்தால் அதில் லைக்ஸ்-குறைவாக வரும் என்பதற்காகவே, மத அடையாளங்களுடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இது அவர்களைக் காட்டுவதை விட மார்க்கத்தை கேவலப்படுத்துவதாக நாம் காண்கிறோம்.
முன்பு இந்தக் கட்டுரையில் நான் சொன்ன "இந்த நேரத்தில் வேறு தவறான கருத்துக்கள் அவர்களிடம் வந்தடைகின்றன" என்பதில் சமூக ஊடகங்கள் மூலம் மிக எளிதாக விஜய் வந்து அங்கே உட்கார்ந்து கொள்கிறார்.
இங்கே நாம் அனைவரும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜய் பற்றிய அவர்களது கருத்துக்கள் அனைத்தும் பிறரால் திணிக்கப்பட்டவையே.
இது எப்படி நிகழ்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
Youtube, Whatsapp, instagram, face book, ரீல்ஸ், X - Page போன்ற அனைத்து ஊடகங்களும் Algoritham அடிப்படையில்தான் வேலை செய்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ?
அதாவது நீங்கள் பார்க்கிற, படிக்கிற, பேசுகிற கருத்துக்களை இந்த சமூக ஊடகங்கள் தாமாகவே 24 x 7 நேரமும் கவனிக்கிறைன.
இதைக் கொண்டு உங்கள் டேஸ்டை, விருப்பத்தை கண்டுபிடித்துக் கொண்டு, அதன் பிறகு அதே உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு, நீங்கள் விரும்பியது சம்பந்தமான / ஆதரவானவற்றையே உங்கள் பார்வைக்கு கொண்டு வரும்.
உங்களுக்கு மேலும் அது பிடித்துப் போக, அவை இன்னும் அதிகமாக அதே கன்டென்ட் சமாச்சாரங்களையே உங்கள் முன் கொண்டு வந்து கொட்டும்.
நீங்கள் தொடர்ந்து பார்க்கப் பார்க்க உங்களுக்கு ஆதரவான கருத்தையே மொத்த உலகமும் கொண்டிருக்கிறது என்ற ஒரு மாய பிம்பத்தை உங்களுக்குள் உருவாக்கி விடும்.. நீங்கள் அந்தச் கருத்தை பலமாக நம்பத் தொடங்கி விடுவீர்கள்.
தொடர்ந்து உங்கள் நம்பிக்கை வலுவாகிக் கொண்டே போகும். ஆனால இது ஒரு காட்சிப் பிழையே.
நீங்கள் திரையில் பார்க்கும் இந்த உலகம் என்பது மிகச்சிறியது ஆனால் அதைத் தாண்டி வேறு பெரிய உலகம்,இருக்கிறது என்பது அதைப் பார்ப்பவர்களுக்கு அப்போது தெரியாது.
ஒரு நாள் அந்த மாய பிம்பம் உடைந்து வேறு உலகம் அவர்கள் முன் தெரிகிற போது அது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையே அளிக்கும்.
ஆக கண்டிப்பு குறைத்து போய் செல்லம் மிகுதியாகி, கூடவே மார்க்கத் தொடர்பும் அறுத்து போனதால் நல்ல வழிகாட்டல் கிடைக்கப் பெறாத இந்த இளைய சமூகத்தில் அனாச்சாரங்கள் உள்ளே வந்து புகுந்து விட்டிருக்கின்றது.
மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடு தெரியாமல் போனதால், எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் வந்து நிற்பவனை முழுதாக நம்பி, வெட்கக்கேடான இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தீர்வு :
அவர்கள் அனைவரிடமும் இஇதை ஒரே நாளில் பேசி புரிய வைக்க முடியாது.
உடனடியாக ஒவ்வொரு மஹல்லாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீனியாத் மதரஸாக்களுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என யாவருக்கும், ஈமான், இஸ்லாம் ஹலால், ஹராம் போன்ற.மார்க்க விஷயங்களையும், சமூக அரசியல் பார்வையையும் கற்றுக் கொடுத்து உண்மை ஈமானுடன் வாழக் கூடியவர்களாக செய்ய வேண்டும்.
இதை போர்க்கால அடிப்படையில் எல்லா ஊர்களிலும், எல்லா ஜமாஅத்துகளும் ஒன்றிணைந்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் மார்க்கக் கல்வியோடு, சமுதாயத்தைக் காக்கும் வகையில் சமூக அரசியல் புரிதல் தரும் உலகக் கல்வியையும் போதிக்க வேண்டும்.
இதற்கு நாம் நிய்யத்து வைப்போம்
வல்ல அல்லாஹ் இதை நிறைவேற்றி தருவான்.
.jpeg)



