N'..நமது குழுவில் அரசியல் கருத்துக்கள், எதிர் கருத்துக்கள் பலவும் பகிர்ந்திருக்கிறோம். அது ஜனநாயக கருத்துரிமை .
ஆனால் 2 நாட்களாக நிலைமை மோசமாகிறது.
நாம் கல்லுரித் தோழர்கள் .
நமக்குள் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும்.
ஒருமித்த கருத்து என்பது குடும்பத்திற்குள்ளேயே இருக்காத போது குழுவுக்குள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கட்சிகளின் தலைமைகளுக்கு ள் கருத்து மோதல்கள் வரும். மோதுவார்கள். பேரம் படிந்து சூட்கேஸ் மாறினால், அடுத்த தேர்தலில் கூட்டணி மாறும். எதிர்த்த கருத்துக்கள் யாவும் ஆதரிக்கும் கருத்துக்களாய் மாறும் அதிசயம் அங்கே நடக்கும்.
முறைத்துக் கொண்ட தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வார்கள்.
எதிர்த்து சண்டை போட்ட தொண்டர்கள் நிலை ?
வாக்குச் சாமர்த்தியமும் ,
எழுத்துச் சாமர்த்தியமும் இருந்தால் இந்த உலகில் எதையும் நியாயப்படுத்த முடியும் ( கருத்து உபயம்: பாலகுமாரன்)
அதே போல் எதிலும் குறை காணவும் முடியும்.
(உ-ம்) ஆ. ராசாவின் பேச்சு .
குறுக்கு வழியில் சசிகலா தயவில் பதவிக்கு வந்தவர் என்ற அர்த்தத்தில் கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று சொன்னது முதல்வரின் தாயைப் பற்றி பேசியதாக பரப்பப்படுகிறது.
இந்த ஒன்றே உதாரணமாகும் பேச்சில் குறை காண்பதற்கும், பேச்சை நியாயப்படுத்துவதற்கும்.
அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை , நிரந்தர நண்பனுமில்லை என்றொரு உலக மகா ஃப்ராடுத்தனமான உண்மையை சொல்வார்கள்.
அடித்துக் கொள்கிற தலைவர்கள் சேர்ந்து கொள்வார்கள்.
அது அவர்களின் சுயநலம்
அவர்களுக்காக நாம் ஏன் வாட்ஸ் அப்பில் போராட வேண்டும்? நமக்குள் ஏன் பகைமையுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் சுயநலம்.
தாய் குழந்தைக்கு பால் கொடுப்பது கூட சுயநலம்தான் என்கிறார் அயன் ராண்ட்.
எல்லோரும் சுயநலத்தில்தான் இயங்குகிறோம்.
அது மதம், ஜாதி, இனம், குடும்பம், சொத்து, பணம், செல்வம், உயிர், உடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த சுயநலத்தில்தான் இயங்குகிறோம்
எனக்கு பாஜக பிடிக்காது. அது சுயநலத்தால்தான். பாஜக மதவாத கட்சி என்பதால் அல்ல. அது முஸ்லீம் விரோத கருத்துக்கள் கொண்ட கட்சி என்பதால் எனக்குப் பிடிக்காது.
ஏனெனில் மத்தியில் ஆட்சிக்கு வரும் முன்பும் சரி, வந்த பின்பும் சரி பெரும்பாலான செயல்பாடுகள், திட்டங்கள் முஸ்லீம்களை குறி வைத்தே இருக்கிறது.
இன்னும் என் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறது. எதிர்த்து பேசினால் தேச விரோதி என்கிறது. அதனால் எனக்குப் பிடிக்காது.
ஒரு வேளை மற்ற நல்ல விஷயங்கள் செய்திருக்கிறது என்று ஆதரிப்போர் சொல்ல வந்தால் அவர்களிடம் நான் கேட்பது என் குடியுரிமையை சந்தேகப்படுத்தி, முடிந்தால் நாடு கடத்தி, பின் நல்ல திட்டம் கொண்டு வரும் என்றால் நான் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்.
இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இது என் தரப்பு நியாயம், சுயநலம்.
ஆக நண்பர்களே நமக்குள் பிரிவினை வேண்டாம். போட்டி, பொறாமை, காழ்ப்புணர்வு, சச்சரவு வேண்டாம் என நினைக்கிறேன்.
அதற்காக நம்மை இன்னொருவர் கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதையும் வெறுக்கிறேன்
அவரவர் சுய கட்டுப்பாடு பேணி, ஒத்த நல்ல கருத்துக்களை மட்டும் குழுவில் பகிர்ந்து கொள்வது நல்லது என நான் கருதுகிறேன்
இதிலும் சுயநலம் உண்டு
குழுவில் எல்லோரும் நீடித்து இயங்க வேண்டும் என்பதே அந்த சுயநலம்.
நண்பர்கள் தங்களின் இது பற்றிய மேலான கருத்துக்களை பகிரலாம்
இனியவை உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
நூர்தீன்
மார்ச் 17, 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக