ஜெயலலிதா நிரபராதியா?
பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!
நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விட்டார். இது விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்பது உலகத்துக்கே தெரியும். இருந்த போதிலும், தான் புடம் போடப்பட்ட சொக்கத் தங்கமாக வெளியே வந்திருப்பதாக கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா.
மிகுந்த அக்கறையுடனும் நேர்மையாகவும் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை, திமிர்த்தனமாகவும் அலட்சியமாகவும் ரத்து செய்திருக்கிறார் குமாரசாமி. மொத்தம் 900 பக்க தீர்ப்பில், சாட்சிகள் சொன்னது, குன்ஹாவின் தீர்ப்பு, அன்பழகன் தரப்பு வாதம், கர்நாடக அரசின் வாதம், சு.சாமியின் வாதம் எல்லாம் சேர்த்து 870 பக்கம். குமாரசாமியின் சொந்த சரக்கு வெறும் 30 பக்கம்தான். அந்த 30 பக்கங்களிலும் வாங்கின காசுக்கு மேல் கூவி விட்டார் குமாரசாமி.
குன்ஹாவின் தீர்ப்புப்படி வருமானத்துக்கு மேல் 540 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் வருமானத்துக்கு மேல் 8.12 சதவீதம் அளவுக்குத்தான் ஜெயலலிதா சொத்து சேர்த்திருக்கிறார் என்பது குமாரசாமி போட்டிருக்கும் கணக்கு. 540 சதவீதத்தை 8 சதவீதமாகக் குறைத்து கணக்கு கட்டுவதற்காக, நகைகள், கட்டிடம் எஸ்டேட் போன்ற பல சொத்துக்களின் மதிப்பை வேண்டுமென்றே அவர் குறைத்துக் காட்டியிருக்கிறார். அரசு ஊழியர் அன்பளிப்பு வாங்குவதில் தவறில்லை என்று கூறி சட்டத்தை வளைத்திருக்கிறார்.வளர்ப்பு மகன் கல்யாண செலவுக்கும் ஜெயாவுக்கும் சம்மந்தமேயில்லை என்று சாதித்திருக்கிறார்.
இப்படிப் பல தகிடுதத்தங்கள் செய்தும் அவரால் சொத்து மதிப்பை குறைக்க முடியவில்லை. வாங்கின காசுக்கு வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஜெயலலிதா வாங்காத கடன் 13.5 கோடி ரூபாயை வாங்கியதாகக் காட்டி கணக்கை முடித்து தீர்ப்பை எழுதியிருக்கிறார் குமாரசாமி.
உலகறிந்த ஒரு ஊழல் வழக்கில் 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்று குமாரசாமி ஒரு கணக்கு போட்டிருக்கிறார். இப்போது பொய்க்கணக்கு அம்பலமாகிவிட்டது. இதன் காரணமாக, 'யானோ மன்னன் யானே கள்வன்' என்று குமாரசாமி நெஞ்சுவலி வந்து உருண்டு விழவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
குமாரசாமியின் கணக்கு சரியா தப்பா என்பதை நாம் சொல்லக் கூடாதாம். அதை உச்ச நீதிமன்ற நீதிபதிதான் சொல்ல வேண்டுமாம். அஞ்சும் மூணும் எவ்வளவு என்று சுப்ரீம் கோர்ட்டில் ராம் ஜெத்மலானி, நாரிமன் போன்ற வக்கீல்கள் வாதாடி, அதுக்கு பத்து வாய்தா வாங்கி, அப்புறம் அப்புறம் தீர்ப்பு சொல்வார்களாம். அதுவரை 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்ற குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில் அம்மா முதலமைச்சராக இருக்கலாமாம். குமாரசாமியை யாரும் குற்றம் சொல்லக் கூடாதாம். சொன்னால் நீதிமன்ற அவமதிப்பாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.
பதினெட்டு ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் வரலாறு முழுவதுமே கேலிக்கூத்துதான். குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள்.
அரசு வழக்குரைஞர் ஆசார்யா மிரட்டி துரத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்தது. அரசு வழக்குரைஞராக பவானிசிங் தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டார். 'அவ்வண்ணமே ஆகுக' என்று தீர்ப்பளித்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஜெயாவுக்கு உடனே பெயில் கொடுத்து, மூன்றே மாதத்தில் மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டார் தலைமை நீதிபதி தத்து. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு நடத்த, பவானிசிங்கை ஜெயலலிதாவே நியமித்துக் கொண்டார். பச்சையான இந்த அயோக்கியத் தனத்தை அங்கீகரித்து, வழக்கை நடத்தினார் குமாரசாமி.
பிறகு பவானி சிங் நியமனமே செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் தீர்ப்பளித்தார். அதனை நிராகரிக்க முடியாததால், "பவானி சிங்கை நியமித்தது சட்ட விரோதம்தான், இருந்தாலும் அரசு தரப்பு வக்கீல் இல்லாமல், குமாரசாமியே நீதி வழங்குவார்" என்று உலகில் எங்குமே கேள்விப்பட்டிராத ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கினார்கள் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு தீர்ப்பை இப்போது குமாரசாமி வழங்கியிருக்கிறார். தத்து குமாரசாமியின் நண்பர் என்றும், சில ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரசாமியை காப்பாற்றி விட்டிருக்கிறார் என்றும் இப்போது செய்தி வெளியாகியிருக்கிறது. தலைமை நீதிபதி தத்துவின் ஊழல் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு.
ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரம் பற்றி ஒரு விசாரணை நடத்தினால், டஜன் கணக்கிலான நீதிபதிகளுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டி வரும்.
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் இந்த நீதிபதிகள்தான் என்பது அப்போது தெரியும்.
ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல. சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு, ராணுவ அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்கும், சத்யம் ராமலிங்க ராஜு போன்ற கார்ப்பரேட் கிரிமினல்களுக்கும்தான் நீதிமன்றங்கள் ஆடுகின்றன. இதுதான் நீதித்துறையின் யோக்கியதை.
உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையும் களவுமாகப் பிடிபட்டாலும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவர்களைத் தண்டிக்க முடியாது. எனவே மிகவும் துணிச்சலாக லஞ்சம் வாங்கும். குற்றவாளிகள், நீதிபதிகள்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
குமாரசாமியின் குருநாதர்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். குன்ஹாவைப் போன்றோர் விதிவிலக்குகள். நீதிபதிகளில் ஆகப் பெரும்பான்மையோரும் குமாரசாமிகள்தான். 45% கமிசன் என்று பொதுப்பணித் துறை காண்டிராக்டர்கள் சொல்கிறார்களே, அதுதான் விதி, முத்துக் குமாரசாமி ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாகி விடாது.
எனவே ஜெயலலிதாவை மட்டுமல்ல. ஊழல் பேர்வழிகளையும் மக்கள் விரோதிகளையும் நீதி மன்றத்தின் மூலம் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகி விட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.
நீதிமன்றம் மட்டுமல்ல. சட்ட மன்றம். நாடாளுமன்றம், போலீசு, இராணுவம் உள்ளிட்ட இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் கிரிமினல்களே நிறைந்திருக் கிறார்கள். போலீசு ஐ.ஜி காப்பியடித்து மாட்டிக் கொள்கிறார். டி.ஐ.ஜி மீது பாலியல் வன்முறை வழக்கு. இன்ஸ்பெக்டர்கள் வழிப்பறி செய்கிறார்கள். இராணுவமோ கஞ்சா கடத்துகிறது. அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மொத்தத்தில் இந்த அரசுக்கட்டமைப்பு தோற்றுவிட்டது. திவாலாகி விட்டது.
குமாரசாமி தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு ஒரு சான்று. இங்கே முதல்வர் முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். நீதிபதிகள் வரை அனைவரும் கிரிமினல்கள் தான். இந்த அரசுக் கட்டமைப்பையே குற்றவாளிகள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த அமைப்புக்குள் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க முடியாது என்பதை புரியாதவர்களுக்கும் புரியும்படி ஜெயலலிதா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
நீதியை நிலைநாட்ட வேண்டுமானால், இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பது ஒன்றுதான் வழி, மக்கள் திரளின் வலிமை கொண்டு மாற்று அரசியல் கட்டுமானங்களை உருவாக்குவோம்! ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள் 9551869588-9445112675
9444834519-9841658457
புதிய ஜனநாயகம்
புதிய தொழிலாளி
மே 2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக