சுபாஷ் சந்திர போஸ் - விடை இல்லாத கேள்விகள்
சில ஆண்டுகளுக்கு முன்னால், சுபாஷ் சந்திர போஸ் பெயரை வைத்து காங்கிரஸ்மீது, நேரு மீது அவதூறு பரப்ப முனைந்தது பீசேப்பி.
சில ஆவணங்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் சீன் போட முயற்சி செய்தது. ஆனால், அந்த ஆவணங்களில் நேருவையோ காங்கிரசையோ குற்றம் சாட்டும் வகையில் எதுவுமே கிடைக்காததால், நக்கித் தின்னி ஊடகங்களை வைத்து கொஞ்சம் குரைத்ததோடு நின்று விட்டது அந்த முயற்சி.
அப்போது மிகவும் கடினமாக உழைத்து ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரைக்கு கீழே உள்ளது வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசியுங்கள்.
குறிப்பாக, அதில் உள்ள கடைசிப் பத்தியையும் கேலிச் சித்திரங்களையும் அவசியம் கவனமாகப் படியுங்கள்.
👇👇👇👇👇👇👇
சுபாஷ் சந்திர போஸ்
ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி வந்தாலே சில கதைகளும் கூடவே வந்து விடும் – சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, நேரு அவருக்கு துரோகம் செய்தார், ரஷ்யச் சிறையில் அடைபட்டிருந்தார், விடுதலைக்குப் பிறகு இந்தியா வந்தார், கும்நாமி பாபா என்ற பெயரில் மறைந்து வாழ்ந்தார்.... இப்படி கதைகள் நீளும்.
சுபாஷ் போஸ் விடுதலை வேட்கை கொண்டவர்தான். ஏராளமான சாகசங்கள் செய்தவர்தான். அவருடைய தியாகங்கள் விடுதலைக்குப் போராடிய எவருக்கும் குறைந்தவை அல்லதான். ஆனால் விடுதலையைப் பெறுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழிகள் சரியானவைதானா என்பது கேள்விக்குரியது.
சுபாஷ் போஸ் மறைந்தார் / உயிரோடு இருக்கிறார் என்பது தொடர்பாக மேலே சொல்லப்பட்ட ஆதாரமில்லாத ஊகங்களுக்கு அவரவர் அரசியல் சார்பு, அறியாமை, விருப்பார்வங்கள், பெருக்கப்பட்ட பிம்பங்கள் எனப் பல காரணங்கள் உண்டு. அப்படியொரு காரணத்தால்தான், 2016 தொடக்கத்தில் மத்தியில் பாஜக அரசு சில ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது. ஆரம்பத்தில் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட – ஏதோ காங்கிரஸ் அரசு மறைத்து வைத்திருந்த சதிகள் எல்லாம் வெளிவரப்போவதாக ஊதிப் பெருக்கப்பட்டது. கடைசியில் அந்த ஆவணங்களில் புதிதாக எந்த ரகசியங்களும் இல்லை. அப்படியே சில இருந்தாலும் அவை சுபாஸ் போசின் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்புகிறவையாகவே இருந்தனவே தவிர, அவருக்கு மேலும் புகழ் சேர்ப்பவையாக இருக்கவில்லை.
2016 ஜனவரி 23ஆம் தேதி, சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில் வெளிவந்த அந்த ஆவணங்களை அலசியும், அதற்கு முந்தைய பல வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையிலும் 26ஆம் தேதி நான் எழுதிய பதிவு கீழே :
-----------------------------------------------------------------------
போஸ் - விடை இல்லாத கேள்விகள்
சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்களை இந்திய அரசு பகிரங்கப்படுத்திய வலைதள இணைப்பு நேற்று மாலை கிடைத்தது. காலை 4 மணி வரை பல கோப்புகளையும் வாசித்துக்கொண்டிருந்தேன். இரகசியக் கோப்புகளை வெளியிடுவது என்று முடிவான பிறகு அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வெளியிட்டிருக்கலாம். தேர்வு செய்து தவணைமுறையில் வெளியிடுவதில் ஒரே நோக்கம்தான் இருக்க முடியும் - காங்கிரசையும் நேருவையும் அவதூறுக்கு உள்ளாக்குவது. அந்த அவதூறுகள் அடங்காமல் நீண்ட காலத்துக்கு உயிர்ப்புடன் இருக்க வைப்பது. நேற்று கோப்புகளைப் புரட்டிய பிறகு இந்தக் கருத்து இன்னும் உறுதியானது.
ஏனோ தெரியவில்லை, கோப்புகளைப் பதிவிறக்க முடியவில்லை. ஒவ்வொன்றும் பல நூறு பக்கங்கள் கொண்ட பெரிய கோப்புகள். பிடிஎஃப் கோப்புகளாக இருந்தாலும் எச்டிஎம்எல் கோப்புகள் மட்டுமே பதிவிறங்கின. மீண்டும் பார்க்க வேண்டுமானால் மீண்டும் வலைதளத்துக்குப் போய்த்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. நேற்று சுமார் ஆயிரம் பக்கங்களுக்குமேல் பார்வையிட்டேன். போசுக்கு ஜப்பானியர்கள் வைத்திருந்த இரகசியப் பெயர் “T”. இது தவிர, பலருக்கும் பல இரகசியப் பெயர்களும் அடையாளங்களும் இருந்திருக்கின்றன. எல்லா ஆவணங்களையும் திரும்பத்திரும்ப வாசித்தால்தான் ஓரளவு புரியும்.
போஸ் விமான விபத்தில் இறந்தார் என்பதை ஷாநவாஸ் குழு அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்தியது. சிங்கப்பூரிலிருந்து பாங்காக், அங்கிருந்து சைகூன் (இப்போது ஹோசிமின் நகரம்), சைகூனிலிருந்து டுரேன், டுரேனிலிருந்து தைஹோகு சென்றது வரை சாட்சியங்களின் கூற்றுகள் பொருந்துகின்றன. விமானம் விபத்துக்கு உள்ளான இடம் அன்றைய ஃபார்மோசாவின் தைஹோகு - இப்போது தைவானின் தைபை - விமான நிலையம். விமானத்தில் பயணம் செய்த ஜப்பானியர்களும் விபத்தில் இறந்திருக்கிறார்கள்.
படுதோல்வி கண்ட ஜப்பான் தனது முக்கிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. விமானப் பற்றாக்குறை வேறு இருந்திருக்கிறது. போஸ் பயணிக்க இருந்த விமானத்தில் அவருடைய முக்கியமான ஆட்கள் ஆறு பேரையும் அழைத்துக்கொண்டுதான் வருவேன் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
சாதாரணப் போர் விமானத்தில் இடம் இல்லாததால் ஒருவரை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும் என்கிற நிலையில், தப்பிச் செல்ல அதிக நேரம் இல்லை என்ற நிலையில், மற்ற ஐவரின் வற்புறுத்தல் மற்றும் ஜப்பானியரின் வற்புறுத்தலின் பேரில் ஒரே ஒருவருடன் செல்ல ஒப்புக் கொள்கிறார். அத்துடன், மக்கள் அளித்த நன்கொடை நகைகள், போசின் உடைமைகள், புத்தகங்கள் என ஏகப்பட்ட பெட்டிகளும் இருந்திருக்கின்றன. அவற்றை எல்லாவற்றையும் எடுத்துச்செல்ல இயலாத நிலையில் இறக்கப்பட்டன. விமானம் வேறு தகராறு செய்திருக்கிறது.
இந்தச் செய்திகள் எல்லாம் ஷா நவாஸ் அறிக்கையில் தெளிவாக இருக்கின்றன. ஒரே ஒரு குறை - அந்தக் குழு ஃபார்மோசா சென்று விசாரிக்கவில்லை என்பது மட்டுமே. கடைசிவரை போசுடன் இருந்த ஹபீபுர் ரஹ்மான் தீக்காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். அவரும் போசுடன் மருத்துவமனையில் இருந்தவர். அவருடைய சாட்சியங்களும், காயங்களின் அடையாளங்களும், உடன் பயணித்து உயிர்தப்பிய சில ஜப்பானிய அதிகாரிகளின் சாட்சியங்களும் காயங்களும்கூட விமானம் விபத்துக்குள்ளாகி, போஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தது வரை பொருந்துகின்றன. சாட்சியங்களின் கூற்றுகளில் விபத்து நேரம் அல்லது உயிரிழப்பு நேரம் குறித்து அரை அல்லது ஒரு மணிநேர வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. மற்றபடி எல்லாமே சரியாகவே இருக்கின்றன.
சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்த செய்தி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் வெளிவருகிறது. இதுதான் ஜப்பான் தரப்பில் நிகழ்ந்த தவறு. போஸ் ஏற்கெனவே பல சாகசங்கள் செய்த கதைகள் உலவிக் கொண்டிருந்தன என்பதால், இதுவும் ஒரு சாகசம், இறந்ததாக ஒரு நாடகம் நடத்திவிட்டு தப்பிச் சென்று விட்டார் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு இருப்பதில் வியப்பில்லை. சொல்லப்போனால், காந்தியும் நேருவும்கூட அவர் இறந்து விட்டார் என்பதை முதலில் நம்பவில்லை என்று தோன்றுகிறது. போஸ் உயிருடன் இருக்கிறார் என்பதான நம்பிக்கை நிலைத்திருக்க இது இன்னும் வலுச்சேர்த்து விட்டது, அல்லது, வாதம் செய்பவர்களுக்கு இன்னுமொரு சாக்காக ஆகிவிட்டது. 1946 மார்ச் 5ஆம் தேதிதான் போஸ் இறந்து விட்டார் என்ற செய்தியை - போசுடன் இருந்த அய்யர் அளித்த தகவலின் அடிப்படையில் நேரு நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார்.
போசின் மரணச் செய்தியை ஜப்பான் உடனடியாக வெளியிடாமல் இருந்தததற்கு அது நிலைகுலைந்திருந்ததும் காரணமாக இருந்திருக்கலாம். முதலில் போசின் உடலை டோக்கியோ எடுத்துச் செல்ல முடிவு செய்த ஜப்பான், பிற்பாடு தைஹோகுவிலேயே எரியூட்டி விடுமாறு செய்தி அனுப்பியதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும். அதன்படி, ரஹ்மான் மற்றும் ஜப்பானிய அதிகாரிகள் முன்னிலையில் எரியூட்டி, அஸ்திகள் ஜப்பானுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கே இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அஸ்தி ஒரு கோவிலில் வைக்கப்படுகிறது. போஸ் கொண்டு சென்ற பெட்டியில் இருந்த ஏராளமான நகைகளும் தமிழர்வசம் ஒப்படைக்கப்பட்டன. பிற்பாடு அவை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. உருக்குலைந்த மற்றும் உருகிய நகைகளின் பட்டியலும் இருக்கிறது. சுபாஷ் போசின் கடிகாரங்கள், சிகரெட் பெட்டி உள்ளிட்ட பொருட்களும் அதில் உள்ளன.
போஸ் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டே இருந்தவர்கள் வங்கத்தினர். இதில் வியப்பேதும் இல்லை. வங்கத்தினரைத்தவிர இன்னொருவர் இதே செய்தியை முன்வைத்து வந்திருக்கிறார். அவர் ஒரு தமிழர். தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். “போஸ் சீனாவில் இருக்கிறார். நானும் அவருடன் சில நாட்கள் இருந்தேன், இப்போது நேரடித் தொடர்பில் இருக்கிறேன். உரிய நேரத்தில் அவர் இந்தியா வருவார்” என்று திரும்பத் திரும்ப - 9 ஆண்டுகள் வரை சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. போஸ் உயிருடன் இருக்கிறார் என்ற வாதத்தை உயிர்ப்புடன் இருக்கச் செய்த அந்தத் தமிழர் - முத்துராமலிங்கத் தேவர்.
ரஷ்யச் சிறையில் சரியான உணவின்றி, போதுமான உடைகளின்றி அவர் இறப்பதைவிட இங்கிலாந்திடமோ அமெரிக்காவிடமோ ஒப்படைப்பது மேலானது. இந்தியர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று 1946 ஜூன் மாத பிளிட்ஸ் இதழில் ஆர்.கே. கரஞ்சியா எழுதியதும் போஸ் உயிருடன் இருக்கிறார் என்ற வாதத்தை வலுப்படுத்தியது.
ஏற்கெனவே இருந்த கதைகள் போதாமல், உத்திரப் பிரதேசத்தில் கும்நாமி பாபா - பெயரில்லாத ஸ்வாமி - என்ற பெயருடன் இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தன. ஒரு பத்திரிகை இதுகுறித்து பெரிய கட்டுரைகளை எழுதியது. அவர் 1985 வரை உயிருடன்தான் இருந்திருக்கிறார். அவரிடம் போசுக்குச் சொந்தமானவை எனக் கருதப்படக்கூடிய ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. அவை உத்திரப் பிரதேசத்தில் பைசாபாத் நீதிமன்றத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
கும்நாமி பாபாவின் உடலை டிஎன்ஏ சோதனை செய்ததாகவும், அது போஸ் டிஎன்ஏவுடன் ஒத்துவரவில்லை என்றும் தெரிகிறது. இதுகுறித்து ஆதாரபூர்வமான செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு திரில்லர் கதைக்கேற்ற களமாக இருக்கிறது. இதை திரில்லராக்கி புத்தகம் எழுதிப் பெயர் பெற்று விட்டார் ஒருவர்.
போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, தீவிரமாக விசாரிக்க வேண்டும், பின்னணியில் ரஷ்யா இருந்திருக்கிறது, சைபீரியாவில் சிறையில் கொல்லப்பட்டார், போன்ற இன்னபிற வாதங்களை மீண்டும் ஆரம்பித்தால் அது சுபாஷ் சந்திர போசின் செயல்பாடுகளையும் பெருத்த கேள்விகளுக்கு உள்ளாக்கும். அதைக் கருதித்தானோ என்னவோ, போஸ் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்த சுபாஷ் போசின் சகோதரர் சரத் சந்திர போஸ் இந்த விஷயத்தை அத்துடன் விட்டு விடுவோம் என்று ஒரு கட்டத்தில் கூறியிருக்கிறார். இது முகர்ஜி கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.
போசின் செயல்பாடுகள் குறித்து என்ன கேள்விகள் வந்துவிடப்போகிறது என்று சிலர் நினைக்கலாம். அந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டுமானால், அவர் 1941இல் இந்தியாவிலிருந்து ஜெர்மனி போனது முதல் தொடங்க வேண்டும். அப்போது அவருக்கு உதவியவர் பகத்ராம். ஜெர்மனி செல்ல இத்தாலியப் பெயரில் பாஸ்போர்ட் வழங்கியது ரஷ்யா. இந்த பகத் ராம் ஒரே நேரத்தில் ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நான்கு நாடுகளுக்கும் உளவாளியாக இருந்திருக்கிறார். ஜெர்மனிக்கும் உளவாளியாக இருக்கிறார் என்பது ரஷ்யர்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கிறது. அவர்களுடைய ஆவணங்களிலும் உரையாடல்களிலும் அது இடம் பெற்றுள்ளது. ஜெர்மனிக்காரர்களுக்கு இப்படிச் சொல், அப்படிச் சொல் என்று ரஷ்யர்கள் சொல்லியும் கொடுத்திருக்கிறார்கள். பகத்ராம் இதேபோல ஜெர்மனிக் காரர்களிடமும் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. ராஜதந்திரத்தில் தேர்ந்தவராகக் கருதப்படும் சுபாஷ் சந்திர போசுக்கு பகத் ராமைப் புரிந்து கொண்டிருக்க முடியாதா?
இந்தியாவிலிருந்து முதலில் அவர் செல்ல நினைத்தது ரஷ்யா. ஆனால் 1941இல் காபூலுக்குப் போன பிறகு ஜெர்மனிக்குப் போக முடிவு செய்கிறார். போலி இத்தாலியப் பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்குச் செல்ல ரஷ்யாதான் உதவியிருக்கிறது. உண்மையிலேயே ரஷ்யாவுக்குத்தான் செல்ல விரும்பினாரா அல்லது ஜெர்மனிக்குச் செல்வதற்காக ரஷ்யாவைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ, இந்தியாவின்பால் அனுதாபம் கொண்டிருந்ததாலும், போஸை நம்ப முடியாது என்பதாலும்தான் அவர் கேட்டதைச் செய்துவிட்டுப் போவோம் என்று ரஷ்யா இப்படிச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ரஷ்ய ஆவணம் ஒன்றில், ரஷ்யர்கள் fed up with bose என்று இருக்கிறது. போசின் எழுத்துகளில் சர்வாதிகார அரசு, தேசியவாத சோஷலிச அரசு அமைப்பது குறித்த கருத்துகள் இருந்திருக்கின்றன என்பதாலும் ரஷ்யா இப்படி நினைத்திருக்கலாம்.
1941இல் ஜெர்மனி செல்கிறார் போஸ். ஜெர்மனியின் உதவியோடு அங்கேயே ஒரு குழு உருவாக்குகிறார். ஜெர்மனியின் உதவியோடு தெற்காசியாவுக்கு வருகிறார். ஜப்பானின் உதவியோடு 1943இல் ஐஎன்ஏ அமைக்கிறார். (ஐஎன்ஏ அதற்கும் முன்பே அமைக்கப்பட்டு விட்டது என்பது தனிக்கதை, இதுகுறித்து வேறொரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.) ஜெர்மனி மற்றும் ஜப்பானின் உதவியோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் அறிவிக்கிறார். இத்தனையும் செய்தபிறகு, ஜெர்மனிக்கு எதிராக ஆங்கிலேயர்களோடு அணி சேர்ந்து போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவின் உதவி கேட்டு 1944 நவம்பரில் கடிதம் எழுதுகிறார் போஸ். அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம் படமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் விமர்சித்த போஸ், தனது கட்சி இடதுசாரி சிந்தனை கொண்டது என்று இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, சிங்கப்பூரிலிருந்து வெளியேறும்போது தான் ரஷ்யாவுக்குப் போக விரும்புவதாகத் தெரிவித்து ரஷ்யாவுடன் தொடர்பு ஏற்படுத்த முனைகிறார். சீனாவுக்குச் சென்று, மஞ்சூரியா வழியாக ரஷ்யா செல்வதே நோக்கமாக இருந்திருக்கிறது. இறுதி நாட்களில் ரஷ்யாவுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி தோல்வி அடைகிறது. இது ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் மூன்று நாடுகளுக்கும் தெரியாமல் இருந்திருக்காது. தன்னுடைய உதவியோடு ராணுவத்தை அமைத்தவர் தனது எதிரி நாட்டிடம் உதவி கேட்கிறார் என்று அறிய நேர்ந்தால் ஜப்பானும் ஜெர்மனியும் என்ன நினைத்திருக்கும் என்று எவரும் ஊகிக்கலாம். இத்தனை காலம் எதிரி நாடுகளோடு அணி சேர்ந்திருந்தவர் இப்போது தனது உதவி கேட்கிறார் என்பதை அறியும்போது ரஷ்யா என்ன நினைத்திருக்கும் என்பதும் ஊகிக்கக் கூடியதே.
இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற போசின் வேட்கையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இறப்பு குறித்து மேலும் மேலும் தோண்டும்போது, அதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறைகள் கேள்விக்குள்ளாகும்..
அது அவருடைய திறமையை அல்லது ராஜதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கும்.
ஆக, மேலும் மேலும் சர்ச்சைகளுக்கு உள்ளாக்காமல், போஸ் விமான விபத்தில் உயிரிழந்து விட்டார் என்பதோடு நிறுத்துவதே உசிதமாக இருக்கும். எத்தனை கோப்புகள் வந்தாலும் புதிதாக ஏதும் தெரியவரப்போவதில்லை, அரசியல் அவதூறுகளுக்குப் பயன்படுவது தவிர வேறேதும் பயன் விளையப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
---------------------------------------------------------------
சுபாஷ் சந்திர போசுக்கு எதிராக நேரு சதி செய்தார் என்ற கதை கட்டும் நண்பர்களுக்காக சில தகவல்கள் :
1920களில் நேருவும் போசும் காங்கிரசுக்கு உள்ளேயே ஒத்த கருத்துக் கொண்டவர்களாக இருந்தனர். பிறகு நேரு காந்தியை தலைவராக ஏற்றார். போஸ் காந்திக்கு எதிராக இருந்தார். (காங்கிரஸ் தலைவர் தேர்தல், சுபாஷுக்கு எதிராக காந்தி இருந்தது எல்லாம் இந்தப் பதிவுக்கு சம்பந்தப்படாத விஷயங்கள்.)
நேதாஜி மறைந்த பிறகு, அவருடன் இருந்தவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தேசத் துரோகம், படுகொலை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தி, கடுமையான தண்டனை தர திட்டமிட்டது. அப்போது நேரு அவர்களைக் கைவிடவில்லை. பிரேம்நாத் செகல், ஷாநவாஸ் கான், குர்பக்ஷ் தில்லான் உள்ளிட்ட பலருக்கும் ஆதரவாக காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் குழுவை ஏற்பாடு செய்த்து. அதில் இடம் பெற்றவர்கள் – நேரு, தேஜ் பகதூர் சப்ரூ, ஆசஃப் அலி, புலாபாய் தேசாய், கைலாஷ் நாத் கட்ஜு உள்ளிட்டோர்.
போசின் மனைவி மற்றும் மகள் அனிதாவின் செலவுக்காக 2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வைக்கப்பட்டு அதற்காக ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதில் ஆரம்பத்தில் டிரஸ்ட் நிர்வாகிகளாக நேருவும், வங்க முதல்வர் ரேயும் மட்டுமே இருப்பதாக வரைவு தயாரிக்கப்பட்டது. பிறகு போசின் மனைவியையும் சேர்த்து மூவர் டிரஸ்ட் நிர்வாகிகளாக இருந்தனர். இந்த இரண்டு லட்சம் ரூபாய் வைப்பு நிதியிலிருந்து மாதம் தோறும் அவர்களுக்கு 500 ரூபாய் போய்ச் சேரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நேருதான் போஸை எதிரியாகக் கருதினார், போஸ் வந்து விட்டால் தன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாறி விடும் என அஞ்சினார் என்று சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் என்னதான் விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தாலும் காந்தி நேரு இருவருடனும் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இல்லை என்பதே உண்மை. ரோமன் ரோலந்த் போசுக்கு எழுதிய ஒரு கடிதத்திலும்கூட, போஸின் விடுதலை உணர்வைப் போற்றினாலும் காந்தியின் போராட்டமுறை ஒப்பற்றது என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
-----------------------------------------------------------------
கடைசியாக, சங்கிகளின் உண்மை முகத்தையும் காட்ட வேண்டாமா?
இன்று சுபாஷ் சந்திர போஸைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அன்று என்ன நினைத்தது தெரியுமா?
கீழே இருக்கும் கேலிச் சித்திரப் படத்தைப் பாருங்கள்.
1945ஆம் ஆண்டு ‘அக்ரணி’ (பிற்பாடு இந்து ராஷ்டிரா) என்ற மராத்தி பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன் இது.
பத்திரிகையின் ஆசிரியர் - கோட்சே. ஆம், காந்தியைப் படுகொலை செய்த அதே கோட்ஸேதான்.
வெளியிட்டோர் - இந்து ராஷ்டிர பிரகாஷன் லிட்.
காந்தியை ராவணன் போல சித்திரிக்கிற இந்த கார்ட்டூனில், அகண்ட பாரதம் என்ற அம்பைக் கொண்ட வில்லை ஏந்தி நிற்பவர்களில் ஒருவர் சாவர்க்கர்.
எந்த சாவர்க்கர் தெரியுமோ? சாவர்க்கர் பெரிய வீரர் என்று தானே எழுதிய ஒரு புத்தகத்தில் தனக்குத்தானே வீரர் பட்டம் கொடுத்துக்கொண்ட அதே மாவீரர்தான். (மற்றொருவர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி என்று நினைக்கிறேன்.)
காவிப் பரிவாரத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலேயர்கள் ராவணனாகத் தெரியவில்லை.
காந்தி, நேரு, படேல், ராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத், கிருபளானி, கோவிந்த வல்லப பந்த் ஆகியோர்தான் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.
எல்லாருக்கும் முதன்மையாக கொல்லப்பட வேண்டியவராக அவர்கள் கருதியது காந்தியைத்தான். நினைத்தபடி கொன்றும் விட்டார்கள்.
Shahjahan R





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக