இஸ்லாமியர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
இது ஒரு நீண்ட கட்டுரை. தயக்கம் தவிர்த்து நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டுகிறேன்.
இந்த வாட்ஸ்- அப் குரூப் வக்ஃப் சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல்கள், உதவிகள் சம்பந்தமாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் மற்ற செய்திகள்தான் அதிகம் வருகிறது.
அதிலும் தனி மனித தாக்குதல்கள், துவேஷங்கள் பகிரப்படுகின்றன. இருக்கட்டும்.
குறிப்பாக அரசியல் சார்பு மற்றும் எதிர் கருத்துக்கள், காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள் பகிரப்படுகின்றன. அதுவும் வரட்டும்.
ஆனால் இவற்றால் எந்த அளவிற்கு சமுதாயத்திற்கு நன்மைகள் நடக்கும் என்பது தெரியவில்லை.
*குறிப்பாக சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் பிரச்னையை மையப்படுத்தி பல கருத்துக்கள் பதியப்படுகின்றன.*
இந்த குழுவில் மட்டுமல்ல, பல முஸ்லீம் குழுக்களிலும் இது பேசு பொருளாக இப்பொழுது இருந்து வருகின்றது.
'முட்டாள் நாயக்கனும் முரட்டுத் துலுக்கனும் பட்டாளத்துக்குத்தான் சரி' என்றொரு தமிழ் பழமொழி உண்டு. அதை மெய்ப்படுத்த நாம் செயல்படுகிறோமோ என்று தோன்றுகிறது.
இந்த பிரச்னையை அறிவுபூர்வமாகவும். ஆக்கபூர்வமாகவும் அணுக வேண்டும் என என் சிற்றறிவு சொல்கிறது.
ஏனெனில் *இது RSS - ன் ஒரு நூறாண்டு கால agenda - திட்டம்.*
பாஜகவின் தாய் அமைப்பு RSS தன் ஒரு நூறாண்டு கனவை திட்டம் போட்டு செயல்படுத்தி வருகிறது.
அது தன் அரசியல் முகமாக பாஜகவை நிறுத்தி இந்தியா முழுவதும் பரந்து விரிந்து ஆளும் அரசாங்கங்களை நிறுவி நிற்கிறது.
தன் வலது சாரி திட்டங்களை எந்த சட்ட திட்டங்களைப் பற்றியும் கவலைப்படாது, அவற்றை புறங்கையில் ஒதுக்கி தள்ளி விட்டு முரட்டுத்தனத்தோடு தற்பொழுது செயல்படுத்தி வருகிறது. இதை நாம் யாவரும் அறிவோம்.
இது பற்றி எந்த விதமான சந்தேகமும் கிஞ்சித்தும் யாருக்கும் கிடையாது என்று நம்புகிறேன்.
RSS தன் ஆக்டோபஸ் கரங்களை நாட்டின் எல்லா மாநிலங்களுக்குள்ளும் நீட்டி இருக்கிறது.
அது தன் அரசை இன்னமும் நிறுவ முடியாமல் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிற இரண்டு மாநிலங்கள் *தமிழ்நாடும், கேரளமும் மட்டுமே*. இந்த இரு மாநிலத்திலும் நுழைய பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதுவும் நாம் அனைவரும் அறிந்ததே.
பெரியாரும், அண்ணாவும் வழி நடத்திய *திமுக, அதிமுக* என்ற இரு பெருங்கட்சிகள் தமிழகத்தில் மதவாத அரசியல் நுழைந்து விடாமல் அரணாய் நின்று கொண்டிருந்தன. இன்னமும் அது தொடர்கிறது
ஜெயலலிதா என்னும் ஆளுமை தன் சொந்த ஈகோவுக்காகவோ அல்லது தன் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழக மக்கள் மீது கொண்ட அபிமானத்தாலோ பாஜக-வின் சில பல திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டினார். அதற்கு பின்னரே அவர் மர்மமாய் மரணமடைந்தார்.
அதன் பின் அவர் கட்சியை தன் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளந்து பலவீனப்படுத்தி இருக்கிறது பாஜக.
அதிமுக இப்பொழுது எடுப்பார் கைப்பிள்ளை போல் பாஜகவின் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறது.
*மிச்சம் இருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே.* அதையும் அழித்து விட்டால் அல்லது பலவீனப்படுத்தி விட்டால் பாஜக இந்த மாநிலத்தில் அதிகாரபூர்வமாய் ஆட்சி கட்டிலில் ஏறி விடும்,
இதை அவர்கள் 2026-க்கு எதிர்பார்த்து செய்வதில்லை. *அவர்கள் திட்டம் 2030-2031 தேர்தலுக்கு.*
அதற்கான பாதைகளை இப்பொழுது போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காகவே தங்களது B டீம்களை உருவாக்கி இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
*திட்டம் 1.*
எந்த காலத்திலும் முஸ்லீம்களின் வாக்குக்கள் தங்களுக்கு விழாது என்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே நமது ஓட்டுக்களை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம் *நமது சமுதாயத்தில் ஒட்டு மொத்த ஒட்டுக்களும் தனக்கு எதிராக ஒரே கட்சிக்கோ அல்லது ஒரே கூட்டணிக்கோ சென்று விடக்கூடாது அவை சிதறடிக்கப்பட வேண்டும்* என்கிற திட்டத்தில் இருக்கிறார்கள். அதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் முஸ்லீம் வாக்குகள் பிரிக்கப்பட்டு விட்டன. (உ-ம்: கோவை குனியமுத்தூர் பொள்ளாச்சி தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது).
இதனால் ஏற்கனவே மைனாரிட்டியாய் இருக்கும் முஸ்லீம் சமுதாயம் இன்னும் பலவீனமடைந்திருக்கிறது.
*திட்டம் 2*.
முஸ்லிம், கிறிஸ்துவர் அல்லாத அனைத்து சமுதாய மக்களையும் இந்துக்கள் என்பதாக ஒன்று சேர்த்து அரசியல் செய்வது. அனைத்து இந்துக்களும் ஒன்றிணைவது தவறில்லை. ஆனால் அதில் மதவெறியை ஊட்டுவதும், பிற மத துவேஷம் பரப்புவதும்தான் தவறு. ஆனால் பாஜக தன் அரசியல் சுயநலத்திற்காக அதைத்தான் செய்கிறது.
அதிகார பின்புலத்தில் மேல் வர்ணத்தார் ஆன ஆணைகளிட்டபடி இருக்க அடுத்த நிலை வர்ணத்தார்கள் தங்களையும் அறியாமல் தங்களுக்கு ஊட்டப்பட்ட மதவெறியால் அவர்கள் திட்டங்களை செயல்படுத்திக் கொடுக்கிறார்கள்.
*இந்த மதவெறியை இந்துக்ககளுக்குள் ஏற்ற அவர்கள் கையில் எடுக்கும் பல திட்டங்களில் ஒன்றுதான் திருப்பரங்குன்ற பிரச்னையும்.*
பாஜக இங்கு இல்லாத பிரச்னையை உருவாக்கி, ஊதிப் பெரிதாக்கி, பெரும்பான்மை இந்துக்களுக்கிடையில் இந்து மதம் முஸ்லீம்களால் அபாயத்தில் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டி வருகிறது.
இதனைக் கொண்டு இந்துக்களை ஒன்று திரட்ட வேண்டும். *இந்துக்களின் ஒட்டுக்கள் மொத்தமும் பாஜகவுக்கு வராது, ஆனாலும் மொத்த வாக்குக்களும் பாஜகவின் எதிரணிக்கு ஒன்றாக ஒரே Bulk ஆக போய் விடக்கூடாது அவை சிதறடிக்கப்பட வேண்டும்.*
அதே போல் *ஒட்டு மொத்த முஸ்லீம்களின் வாக்குக்களையும் பாஜகவின் பிரதான எதிர்கட்சி கூட்டணிக்கு (திமுக, காங் கூட்டணி) போக விடாமல் சிதறடிக்க வேண்டும்.*
இதைத்தான் பாஜக செய்ய காய் நகர்த்தி வருகிறது.
நாமும் அவர்களின் திட்டத்தை தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் பிரிந்து நின்று அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறோம். *இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.*
பெரும்பான்மை இந்துக்களின் வாக்குக்களால் கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன. நம்மைப் போன்ற மைனாரிட்டிகளின் ஆதரவு அந்த ஆட்சிக்கு கூடுதலாக பெரும் பலத்தைக் கொடுக்கிறது.
நம் முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மட்டுமே ஆட்சியை நிர்ணயிப்பதில்லை.
ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மையாக இருக்கும் சமுதாயத்தைச் சார்ந்தவருக்கே சீட்டு வழங்கப்படுகிறது. இதை எல்லா கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. ( உ-ம் ) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வாணியம்பாடியில் ஒரு இடைத்தேர்தலில் திமுக சார்பாக நின்ற நாகூர் ஹனீபாவை எதிர்த்து ஜெயலலிதா ஒரு இந்து வேட்பாளரை நிறுத்தி வென்று காட்டினார்.
இந்த அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம்களால் வெற்றியை நிர்ணயம் செய்யும் அளவிலான தொகுதிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.
இந்த நிலையில் எங்களுக்கு 30 சீட்டுகள் வேண்டும் என்று மிரட்டுகிற தொனியில் கோரிக்கை வைத்தால் நம்மை எல்லா கட்சிகளும் கை கழுவி விட்டுப் போய் விடும் அபாயம் இருக்கிறது. ஒரு வேளை அப்படி பத்தோ, பதினைந்தோ சீட்டுகள் ஒதுக்கப்பட்டாலும் நிற்பவர்கள் *பெயர் தாங்கி* முஸ்லீம்களாகத்தான் இருப்பார்கள்.
மார்க்கம் அறிந்த, உயர் கல்வி கற்ற முஸ்லீம்கள் அந்த இடத்திற்கு வருவதில்லை. வந்தாலும் அவர்களுக்கு செலவு செய்ய சமுதாயத்தில் இருக்கும் செல்வந்தர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
காங்கிரசை ஒழிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பிய பெரியார் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு அதை ஆதரித்தார். இதைப் பற்றி கேட்ட போது பெரியார், *"எதிர்த்து அரசியல் செய்தால் கிடைக்கும் பலனை விட ஆதரித்தால் என் மக்களுக்கு அதிகம் பலன் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் அரசை ஆதரிக்கிறேன்*" என்றார்.
அதே போல் திமுக எதிர்ப்பு அரசியல் செய்வதால் சமுதாயத்திற்கு என்ன பயன் கிடைக்கும்?
திமுக ஆதரவு அரசியல் செய்து சமுதாயத்திற்கு எப்படி பயன் பெறுவது? என்ற நோக்கில் நாம் கவனிக்கலாம்.
திமுகவுக்கு மாற்றாக அடுத்த நிலையில் எந்த கட்சிகளும் சரியாக இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
இப்பொழுது *எதிர்ப்பு அரசியல் எடுப்பது என்பது பாஜகவிற்குத்தான் பெரும்பலனாக அமையும்*.
*பாஜக வந்து விடும், பாஜக வந்து விடும்* என்று வெறும் பூச்சாண்டி காட்டவில்லை.
*நிழலின் அருமை வெய்யிலில்தான் தெரியும்.*
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்கள் நடத்தப்படும் விதம் பற்றி நாம் அனைவருமே அறிவோம். *அந்த நிலை நமக்கும் வர வேண்டுமா?* என்று சிந்தித்துப் பாருங்கள்.
நம் மாநிலத்தில் நம்மை இந்த நிலைக்கு சென்று விடாமல் பாதுகாப்பது *அல்லாஹ்தான்*. அதையடுத்து எந்த அரசும் நம்மை காப்பதில்லை. வெளிப்படையாக அவை காக்காது.
*மாற்று மத சகோதரர்களின் ஒத்துழைப்பில்தான், அவர்களின் அரவணைப்பு, ஆதரவில்தான் நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்*.
மத நல்லிணக்கத்தோடு அது தொடர அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக.
கோவை சிறைவாசிகள், திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் நடவடிக்கைகள் என்று பல கசப்பு அனுபவங்கள் நம் எல்லோருக்கும் உண்டு.
அவற்றை தக்க விதத்தில் அரசின் மேலிடத்தின் பார்வைக்கு கொண்டு சென்று நம் காரியத்தை நாம்தான் சாதித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இருக்கிற அரசு கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்கிற அரசு. நாம்தான் குரல் கொடுத்து அவர்கள் காதில் போட வேண்டும்.
*இந்தியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மியும், காங்கிரசும் டெல்லியில் தனித்தனியே நின்றதால் பாஜக எளிதாக வென்றிருக்கிறது. இருவரும் இணைந்து நின்றிருந்தால் பாஜக படுதோல்வியைத் தழுவியிருக்கும்*.
இன்று (08.02.2025) இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக புலம்பிக் கொண்டிருக்கின்றன.
இது ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு பாஜகவை எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறங்கி வரும் சூழல் இது.
*இப்பொழுது நம் நியாயமான கோரிக்கைகளை அவர்களிடம் எழுப்பி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்*.
ஆனாலும் நடப்பது திமுக ஆட்சியாக இருந்தாலும் அரசு எந்திரத்தை நகர்த்துவதில் *அரசு அதிகாரிகளின் கைகளும் இருக்கின்றன*. (விடுதலை - பாகம் 2 படம் பார்க்க).
அந்த அதிகாரிகளில் பாஜகவின் சங்கிகள் பலரும் ஊடுருவி இருக்கிறார்கள்.
*ஆட்சி அதிகாரம், நிர்வாக அதிகாரம் இரண்டிலும் அவர்களின் பங்கு இருக்கிறது.*
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக இருந்தார்கள், நேரம் அமையும் போது வெளியேறினார்கள். சிலர் இன்னமும் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு களைய ராகுல் காந்தியால் முடியவில்லை. அதனால்தான் காங்கிரஸ் தொடர் தோல்விகளை அடைந்து கொண்டிருக்கிறது.
நாம் நம் சமுதாயத்தை பாதுகாக்க ஒன்றுபட வேண்டியது அவசியம்.
ஆனால் நாம் *'என் உம்மத்தில் 72 கூட்டம் வரும்*' என்ற நபிகள் நாயகத்தின் வார்த்தைகளை மெயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
*ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள்* என்ற கோஷத்தை தனித்தனியாக கூவிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முன் நம் சமுதாயக் குழுவின் தலைவர்களோ நம்மை கூட்டம் கூட்டமாக அழைத்து தன் பலத்தைக் காட்டி சூட்கேஸ் பேரம் பேசி நம்மை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
இது நம் சமுதாயத்தில் மட்டும் நடக்கவில்லை. இந்துக்களின் சாதிச் சங்கங்களும் இந்த ஃபார்முலாவை பின்பற்றின.
நமக்கு அடுத்த தலைமுறையாவது இன்னும் கண்ணியமாகவும், நிம்மதியாகவும் இங்கு வாழ இரு விஷயங்களில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிகார மையம் என்பதில் இரண்டு இருக்கிறது.
ஒன்று *ஆட்சி அதிகாரம்*..
இதை அடைய அரசியலில் போராடி வென்று அதிகாரத்தில் அமர்வது.
இரண்டு *நிர்வாக அதிகாரம்*,
இதை கல்லி மூலம் அடைய வேண்டும். சொத்து, வசதி, செல்வம் மட்டும் போதாது. நாளைய தலைமுறை உயர் கல்வி படித்து *நீதித்துறை, காவல்துறை, நிர்வாகத்துறை போன்ற மத்திய, மாநில அரசு வேலைகளில் அமர வேண்டும்*.
இந்த இரண்டையும் விளிம்பு நிலை மக்களாக இருந்த தாழ்த்தப்பட்ட இன மக்கள் ஓரளவிற்கு சென்றடைந்து விட்டார்கள்.
ஆனால் நாம் இவற்றைப் புறந்தள்ளி விட்டு, புறம்பேசிக் கொண்டு இன்னமும் இருக்கிறோம்.
யோசியுங்கள் நண்பர்களே.
நான் திமுகவிற்கு ஆதரவாக இதைச் சொல்லவில்லை.
ஆனால் இன்றைய சூழலில் அதற்கு மாற்றாக எதுவும் தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் இதை பதிகிறேன்.
மாற்றுக் கருத்தும், மாற்று வழிகளும் இருப்பின் பதிலாக பகிரலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஏ.எம்.நூர்தீன்
08.02.2025
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக