சமூகமாற்றத்துக்கு திராவிட இயக்கங்கள் அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்
கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே இருந்த நிலையில், பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;
பனகல் அரசர் என்ன செய்தார்?ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர் பனகல் அரசரையே சேரும்.
சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது. இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.
நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால்,மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி , தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.
பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு , தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன்.
தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது.
குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.