திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம் தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!
இங்கே இன்னொரு முரண் என்னவென்றால், சங்கிகள் எந்தளவுக்கு திமுகவை வெறுக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களை புரட்சியாளர்கள் என்று கருதிக்கொள்ளும் தோழர்கள் சிலரும் வெறுப்பது தான்!
சங்கிகள் திமுகவை எதிர்ப்பது மிக சிப்பிள் லாஜிக். சங்கிகள் திமுகவை தங்கள் கொள்கையின் நேரடி எதிரியாக பார்க்கிறார்கள்.
இயற்கையை காப்போம் என ஒரு பக்கம் நம்மை பேசவிட்டு அவர்கள் நீட், ஐஏஎஸ் என நம் மக்களின் உயர்வை அழிக்க வருகிறார்கள்.
இதில், தோழர்கள் திமுகவிடம் முரண்படுவதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் சிக்கலானது.
சில பெரியாரியர்கள், திமுக பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என குற்றம் சாட்டுவார்கள்.
சில தமிழ்தேசியர்கள், அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது கொள்கை சமரசம் என்பார்கள்.
சில தலித்தியவாதிகள் திமுக சூத்திரர்களின் கட்சி என சொல்லுவார்கள்.
சில பொதுவுடமை தோழர்கள், திமுக முதலாளிகளின் கட்சி என்பார்கள்.
மேலோட்டமாக பார்த்தால், இதில் எல்லாமே உண்மை இருப்பது போலத்தான் இருக்கும். உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால், திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை கையில் எடுத்தது.
திமுக பெரியாரின் இயக்க அரசியல் பாதையை கைவிட்டு, தேர்தல் அரசியலை கையில் எடுத்தது. புரட்சிப்பாதையை கைவிட்டு மக்களாட்சி பாதையை தொடர்ந்தது.
சூத்திரர்களின் ஆட்சி என சொல்லப்படும் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே அதிகமான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
கட்சியிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக. இசைவேளாளர் எனும் மிகவும். ஒடுக்கப்பட்ட ஆள் பலமில்லாத சாதியை சேர்ந்த கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததே சமூகநீதியின் வெற்றி தான். பறையர்களின் கட்சி என்று பேர் வாங்கிய கட்சியான திமுக, இன்று பறையர்களுக்கு கருணாநிதியின் துரோகம் என்று புத்தகம் வெளியிடும் கட்டத்தில் இருப்பதன் பின்னனியை ஆராயவேண்டும்!
ஐடி கம்பெனிகள், கார்ப்பரெட் கம்பெனிகளை கொண்டு வந்த அதே திமுக தான், ஒரு ரூபாய் அரிசியில் இருந்து இலவச மருத்துவ காப்பீடு வரை சோசியலிச பாதையில் பயணித்ததும் திமுக தான்!
பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் பார்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு எதிரான பண்பாட்டை நிறுவியவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களின் பெயர் சிரமணர்கள். அதாவது, சிரமமான பாதையான கடும்தவம், புலால் மறுப்பு, துறவு வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். கௌத்தம புத்தர் தனது ஆரம்ப காலத்தில் இந்த கடுந்தவ வாழ்க்கையை தான் வாழ்ந்தார். பிறகு, தன்னை உணர்ந்த போதி நிலையை அடைந்த பின், புத்தர் தனது பாதையை “மஜ்ஜிம பதிபாதம்” என்ற நடுநிலை பாதைக்கு மாறினார். அதாவது, கடும் தவம் தேவையில்லை. ஒரு எளிய மனிதனும் பின்பற்றும் வகையில் பௌத்தத்தை உருவாக்கினார். அதே வேளையில், தனது
அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, உயிர் நேயம், அறம் சார்ந்த வாழ்வியல் என்பதிலும்..மானுட வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதிலும் எவ்வித சமரசமும் செய்யவில்லை. இன்று உலகெங்கும் பௌத்தம் பரவி வாழ்வதற்கு இந்த நடுநிலை பாதையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
திமுகவின் பாதையும் ஒரு வகையில் இந்த நடுநிலைபாதை தான். அது தான் தேர்தல் பாதை. மக்களாட்சி என்கிற ஜனநாயக பாதை. ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்!
- ராஜராஜன் ஆர்.ஜெ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக